எவ்வித கலந்தாலோசிப்பும் இன்றி மாதாந்திர உதவித் தொகை வழங்கும் செயல்முறையை மாற்றியிருப்பது நியாயமற்ற ஒன்றாகும் இவ்வாறு தங்களின் மனக்குமுறைலை தற்போது வெளிப்படுத்தி இருக்கின்றனர் மலேசிய மாற்றுத்திறனாளி சங்கத்தினர் மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் சமூக நலத்துறையான ஜே.கே.எம். தங்களுக்கு வழங்கும் 450 ரிங்கிட் உதவித் தொகையில் 50 விழுக்காட்டை ரொக்கமாகவும் எஞ்சிய 50 விழுக்காட்டை கே.கே.எம்- கேஷ்லஸ் கார்ட் எனப்படும் ரொக்கமற்ற அட்டையின் மூலமாகவும் வழங்க கடந்தாண்டு ஏப்ரலில் எடுக்கப்பட்ட முடிவானது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கூறுகின்றனர்.
இந்தப் புதிய செயல்முறை வழங்கப்படும் உதவித் தொகையைக் குறுகிய வரம்புடன் பயன்படுத்தும் சூழலுக்குத் தங்களைத் தள்ளி இருப்பதாக மலேசிய மாற்றுத்திறனாளிகளின் தன்னிலை பயிற்சி மையத் தலைவர் பிரான்சிஸ் சிவா குறைப்பட்டுக் கொண்டார்.
அதேவேளையில் பேன்க் இஸ்லாம் வங்கியுடன் பதிந்து கொண்ட மற்றும் ஜே.கே.எம்-மின் கீழ் செயல்படும் கடைகளில் மட்டுமே இந்த ரொக்கமற்ற அட்டையைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களையும் மருந்துகளையும் வாங்குவது அதிக சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
இதனால் அப்பணத்தைக் கொண்டு எந்தக் கடையில் என்ன பொருள் வாங்க வேண்டும் என்பதை ஜே.கே.எம் மறைமுகமாக நிர்ணயித்துள்ளது வருத்தம் அளிப்பதாக பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.
இப்பொழுது அரசாங்கம் எங்களுக்குத் தெரியாமல் கடந்த வருடம் நான்காம் மாதம் புதிதாக சட்ட திட்டத்தினை பிரதமர் அமல்படுத்தியிருக்கின்றார்.
திரங்கானு, கிளாந்தானுக்குப் பிறகு இப்பொழுது சிலாங்கூரில் இத்திட்டத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் மாற்று திறனாளிகளுக்கு பெரிய அளவில் கஷ்டத்தினைக் கொண்டு வரபோகின்றது என்று பிரான்சிஸ் சிவா தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதிக்கும் சில அரசு சார்பற்ற அமைப்புகளோடு 70 பேர் கொண்ட குழுவுடன் புத்ராஜெயாவில் உள்ள மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கட்டிட வளாகத்தில், தாங்கள் மறியலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அமைச்சர் டத்தோஶ்ரீ ரீனா ஹருனுடன் தாங்கள் மேற்கொள்ள முயற்சித்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்ததாகவும் பிரான்சிஸ் சிவா குறிப்பிட்டார்.
இதனிடையே புதிதாக மாற்றம் கண்டிருக்கும் இந்தச் செயல்முறை குறித்து சில மாற்றுத்திறனாளிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
எனக்கும் பல நோய்கள் இருக்கின்றன. நான் தினசரி சுங்கை பூலோ மருத்துவமனைக்குச் சென்று வரும் நிலையில் இருக்கிறேன்.
தினமும் எனக்கு போக்குவரத்திற்கு மட்டும் 40 ரிங்கிட் தேவைப்படுகிறது. ஏனெனில் நான் கிராப்' சேவையைப் பயன்படுத்துகிறேன். மாதத்திற்கு இருமுறையாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.
ஜே.கே.எம் வழங்கும் இந்த ரொக்க உதவிநிதி குறைக்கப்படும் பட்சத்தில் நான் வீட்டிலேயே இறந்துகிடக்க வேண்டியதுதான். ஏனெனில் நான் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் போகிறது. பாரங்களைப் பூர்த்திச் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜே.கே.எம்-க்கு சென்று திரும்பிக் கொண்டுதான் இருக்கிறேன்.
தற்போது இப்படி ஒரு செய்தி. அமைச்சர்களைச் சந்திக்கவும் செல்கிறேன். எத்தனையோ முறை புத்ராஜெயா சென்றுவிட்டேன். ஒரு அமைச்சரைக்கூட சந்திக்க முடியவில்லை சம்சிர் அப்துல் லத்திப் கூறினார்.
எனவே மாற்றுதிறனாளிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சிறந்த தீர்வை காண எண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்
No comments:
Post a Comment